Friday, April 3, 2026 2:11 pm
மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கநகைகளுக்காக பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி அவர்களை கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர் மற்றும் 22 வயதுடைய சகோதரர், ஆட்டோ சாரதி ஆகியோர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த இரு நகைக்கடை உரிமையாளர்களும் மீண்டும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மயக்க மருந்து வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு – வத்தளை பகுதியில் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொலிஸ் தடுப்புக் காவலில் 3 நாட்கள் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரைக் கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் காணும் ஆள் அடையாள அணிவகுப்பு நீதிமன்றத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அரங்கேற்றப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலதிக சாட்சியங்களைத் திரட்டும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

