Saturday, November 1, 2025 3:59 pm
கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல்களில் அமெரிக்கப் படைகள் நடத்திய பெரும் தொடர் தாக்குதல்களில் 60 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 15 இற்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அமெரிக்காவின் ஏபிசிநியூஸ் (abcnews) இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல்களை முறியடிக்க வெனிசுலா கடற்கரைக்கு அருகில், அமெரிக்க இராணுவம் பாரிய அளவில் குவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி (BBC) உலக செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அனைத்துக் கப்பல்களையும் அழித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத் தாக்குதல் பற்றிய உண்மைத் தகவலைகளை பெற முடியவில்லை என ரொய்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்திருக்கிறது. ஆனால் எந்த நோக்கத்துக்கான என்பது தெளிவில்லை என ரொய்டர்ஸ் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் வெளியிடப்பட்டுள்ள செயற்கைக்கோள் படங்களின் பரகாரம், யு.எஸ்.எஸ் இவோ ஜிமா’ என்ற தாக்குதல் கப்பல், வெனிசுலா கடற்கரையிலிருந்து 200 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது போன்று காண்பிக்கின்றது.
வெனிசுலா நாட்டில் உள்ள ட்ரென் டி அரகுவா (Tren de Aragua – TdA) போன்ற போதைப் பொருள்கடத்தல் குழுக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் பரந்த போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இத் தாக்குதல் நடவடிக்கை சித்தரிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இத் தாக்குதல், சட்டவிரோதமானதும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியும் நடத்தப்பட்ட தாக்குதல் என ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ளன.
இவ்வாறான கொலைகளை நிறுத்த வேண்டும் என்று ஜெனிவா மனித உரிமைச் சபை வலிறுத்தியுள்ளது. தாக்குதல்களுக்கான காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஜெனிவா கூறியுள்ளது.
அதேநேரம், பி-1 மற்றும் பி-52 குண்டுவீச்சு விமானங்கள், அத்துடன் எஃப்-35 போர் விமானங்களும் குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்கா தமது நாட்டின் மீது தொடுத்த பெரும் போர் எனவும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றம் சுமத்தியுள்ளார்.
வெனிசுலாவின் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்குமாறும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ உத்தரவிட்டுள்ளார். வெனிசுலாவில் படைகள் உசர் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டும், மூன்று நாசகார கப்பல்களுடன் கரீபியன் கடலுக்கு அமெரிக்கா நகர்த்தியுள்ளது. இந்த மிகப்பெரிய கப்பலின் நகர்வை காண்பித்து நிக்கோலசு மதுரோவின் ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதே அமெரிக்காவின் நோக்கம் என்று சர்வதேச அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
வெனிசுலா அரசாங்கத்தை கவிழ்க்க டொனால்ட் ட்ரம்ப் முயற்சிக்கிறார் என்பதில் “சந்தேகமில்லை” (No Doubt) என்று பிபிசி செய்திச் சேவையிடம் பேசிய வெனிசுலா அரசின் சட்டமா அதிபர், தங்கம், எண்ணெய் மற்றும் தாமிரம் உள்ளிட்ட வெனிசுலா நாட்டின் இயற்கை வளங்களை அமெரிக்கா கைப்பற்ற விரும்புவதாகக் குற்றம் சாட்டினார்.
ஒக்ரோபர் 25 ஆம் திகதியில் இருந்து இன்று சனிக்கிழமை வரையும் தாக்குதல் தொடராக நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

