Monday, October 27, 2025 6:06 pm
அஸ்வெசும (Aswesuma) என்ற சிங்களப் பெயரில் இலங்கை அரசாங்கம் வழங்கி வரும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவு அமைப்பு பராமரிக்கப்பட வேண்டும் என்று உலக வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நோக்கத்திற்காகத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் சர்வதேச நிபுணத்துவத்தையும் வழங்க தயாராக இருப்பதாக உலக வங்கிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பான அமைச்சக ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார மேம்பாடு மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டத்தில் இது பற்றிய உரையாடல்கள் இடம்பெற்று பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று திங்கட்கிழமை கொழும்பில் கூட்டம் இடம்பெற்றது.
கிராமப்புற மேம்பாடு, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் உபாலி பன்னிலகே மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்கேற்புடன் இந்த கூட்டம் நடைபெற்றது. உலக வங்கி பிரதிநிதிகள் குழுவில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கான மூத்த பொருளாதார நிபுணர் திருமதி பிரான்செஸ்கா லமன்னா மற்றும் மூத்த சமூகப் பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் மற்றும் பலர் உரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
இதுபோன்ற சமூகப் பாதுகாப்புத் தரவு அமைப்பு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாக அமைகிறது என்றும், எனவே, தரவு அமைப்பைத் தொடர்ந்து புதுப்பிப்பதன் அவசியத்தை உலக வங்கி அதிகாரிகள் வலியுறுத்தினர்.
அஸ்வெசும சலுகைகளை விநியோகிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவாதத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அஸ்வெசும திட்டத்தின் பயனாளிகள் உள்ளூர் குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியலை அந்தந்த கிராமத்திற்குள் பொதுவில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் உலக வங்கி பிரதிநிதிகள் பரிந்துரைத்தனர்.
அஸ்வெசும திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், செயல்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு போதுமான தகவல்கள் வழங்கப்படாததால் சில சவால்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் உரிய முறையில் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் என உலக வங்கி பிரதிநிதிகள் பரிந்துரைத்தனர்.

