Wednesday, November 12, 2025 7:49 pm
இஸ்லாமபாத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் ஜனாதிபதி அலுவலகத்தில் அவசர ஆராய்வு உரையாடல் (an (urgent huddle) ஒன்றை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான்ரூடே (pakistantoday)என்ற ஆங்கில நாளிதழ் இன்று புதன்கிழமை செய்தி வெளியி்ட்டுள்ளது.
பாகிஸ்தான் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலின் தீவிரத்தை கோடிட்டுக் காட்டும் வகையில், கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மலைப் பகுதியில் இருந்து வன்முறை பற்றிய புதிய அறிக்கைகள் தொடர்ந்து வெளிவருவதால், அது பற்றிய ஆராயும் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றததாக அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத்தின் ஜி-11 பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் பற்றியே அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டது. தலைநகரில் நடந்த மிக மோசமான தாக்குதல்களிலில் 12 பேர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டனர். 36 பேர் காயமடைந்தனர்.
இத் தாக்குதல் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற வகையில், கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள், அருகில் உள்ள மலைப் பகுதிகள் போன்றவற்றின் பாதுகாப்பு பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் செனட் தலைவர் யூசுப் ராசா கிலானி, தேசிய சட்டமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக் மற்றும் மத்திய அமைச்சர்கள் சையத் முஷ்டாக் ரசா நக்வி, சவுத்ரி சாலிக் ஹுசைன், அசாம் நசீர் தரார், காலித் ஹுசைன் மக்சி மற்றும் அப்துல் அலீம் கான் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக் கூட்டம் பற்றி பிரதமர், எக்ஸ் தளத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளதையும் பாகிஸ்தான் ரூடே வெளியிட்டுள்ளது.

