Monday, October 27, 2025 8:33 am
மாத்தறை மாவட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, கொலை செய்யப்பட்ட பின்னர், மக்கள் பிரதிநிதிகளுக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன் பிரகாரம், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், மாநகர முதல்வர்கள் ஆகியோரின் விபரங்களை பெற்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பாதாள உலகக் குழுக்களிடமிருந்து அல்லது வேறு ஆயுதக் குழுக்களிடமிருந்து கொலை அச்சுறுத்தல் ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம், அச்சுறுத்தலுக்கு உள்ளான உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களை உளவுப் பிரிவு பொலிஸாரிடம் இருந்து சில நாட்களில் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

