Friday, October 24, 2025 10:41 pm
இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறிப்பாக இறுதிப் போரில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை அவசியம் இல்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு கூடியதும், வாய்மொழி மூல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த விடயத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடாக விளக்கமளித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபையின் 60 /1 தீர்மானத்தில் உடன்பாடு இலலை என்றும் ஹரிணி தெரிவித்தார்.
வெளியக சக்திகளின் தலையீடு இலங்கைத்தீவை பிளவுபடுத்தும். உள்ளக ரீதியான விசாரணைகள் பொருத்தமானவை என்று கூடடிக்காட்டிய ஹரிணி, சர்வதேச விசாரணைகள் உள்ளக விசாரணை பொறிமுறைக்கு இடையூறாக அமையும் என்றும் விளக்கமளித்தார்.
நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை அமைத்து தனிநபா் பொறுப்புக்கூறல் முறைமையை முன்னேற்ற, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி தெரிவித்துள்ளார்.
இலங்கைப் படையினரை சர்வதேச அரங்கில் காட்டிக்கொடுக்க முடியாது. ஆனால் போர்க்குற்றம் புரிந்த படையினர் தண்டிக்கப்படுவர். அதனை முழுமையான உள்ளக விசாரணை ஒன்றின் ஊடக செயற்படுத்த முடியும் என்று பிரதமர் ஹரிணி மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
இச் செயற்பாடுகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைகளில் முக்கியமான ஒரு வகிபாகம் எனவும் ஹரிணி அமரசூரிய விரிவுபடுத்தினார்.

