Monday, April 13, 2026 12:29 pm
இந்தியத் திரையுலகின் இசைக்குயில் என போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே தனது 92 வயதில் காலமானார். மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
இவருடைய மறைவானது இசைத்துறையில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே இந்திய இசை உலகின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்தவர். சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் இந்திய சினிமாவை வசப்படுத்தியவர்.
1943ம் ஆண்டு மராத்தி திரைப்படமான மஜா பால் என்ற படத்தில் சலா சலா நவ் பாலா…’ என்ற பாடல்தான் அவர் பாடிய முதல் பாடல். தனது 10-வது வயதில் பாடகியாக அறிமுகமான ஆஸா தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இசை வரலாற்றில் அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் . தனது தனித்துவமான குரலால் எட்டு தசாப்தங்களாக இசைத்துறையில் கோலோச்சியவர்.
தமிழில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல், ஹேராம் திரைப்படத்தில் இடம்பெற்ற நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி பாடல், அலைபாயுதே திரைப்படத்தில் வெளியான செப்டம்பர் மாதம் பாடல் மற்றும் சந்திரமுகி திரைப்படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் போன்ற காலத்தால் அழியாத பல ஹிட் பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றவர்.
பஜனைகள் முதல் கபரே (Cabaret) பாடல்கள் வரை அனைத்து வகையான பாடல்களுக்கும் பொருந்தக் கூடிய குரல் அவருடையது. தனது 90-வது வயதிலும் அவர் தொடர்ந்து பாடி வந்தார்.
ஹன்ஸ்ராஜ் பாஹ்ல், ஓ. பி. நய்யார், மதன் மோகன்,ஆர். டி. பர்மன், இளையராஜா, அனு மாலிக் முதல் ஏ. ஆர். ரஹ்மான் வரையிலான கலைஞர்களுடன் அவர் பணியாற்றியுள்ளார். ரஃபி, முகேஷ் மற்றும் கிஷோர் முதல் பாய் ஜார்ஜ் மற்றும் ஆதித்யா நாராயண் வரையிலான கலைஞர்களுடன் இணைந்து அவர் பாடியுள்ளார். 1995-ஆம் ஆண்டில் உஸ்தாத் அலி அக்பர் கானுடன் இணைந்து வெளியிட்ட ஒரு இசைத் தொகுப்பிற்காக அவர் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பல்வேறு இராகங்களில் பாடி கவனம் பெற்றவர் ஆஷா போஸ்லே. இவர் 1981 இல் உம்ராவ் ஜான் படத்திற்காக தனது முதல் தேசிய விருதையும், 1988 இல் இஜாசத் படத்திற்காக தனது இரண்டாவது விருதையும் வென்றார்.
2000 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதையும், 2008 இல் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதையும் பெற்றார்.
2023 ஆம் ஆண்டில் போஸ்லே தனது 90வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு பதிலாக துபாயில் நடந்த நேரடி இசை நிகழ்ச்சிக்காகப் புறப்பட்டு சென்றார். அதில் பேசிய அவர் 90 வயதில் மேடையில் மூன்று மணி நேரம் நின்று பாடுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது- மக்கள் சுவாசத்தை நிறுத்தும்போது இறக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இசை என் சுவாசம். நான் அதற்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என்று பேசினார்.
2022ம் ஆண்டு ஜாக்கி ஷெராஃப்பின் லைஃப்ஸ் குட் படத்தின் ருத் பீகே தன் என்ற பாடல்தான் ஆஷா போஸ்லே கடைசியாக பாடிய ஹிந்தி பாடல் ஆகும்.
மறைந்த ஆஷா போஸ்லேவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷா போஸ்லேவின் மறைவுச் செய்தி கேட்டு இந்தியத் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இசைத் துறையில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானதை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் அவருக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அவருடைய உடல் மண்ணுக்குள் புதைந்தாலும் இசைத்துறையில் அவர் விட்டுச்சென்ற கால்தடம் என்றும் அனைவரது மனதுக்குள் நிலைத்திருக்கும் என்பதே நிதர்சனம்.

