கொழும்பு கோட்டையில் உள்ள சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் நேற்று (6) இரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் “லங்காதீப” சிங்கள ஊடகத்திடம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, சிறப்பு பொலிஸ் குழு ஒன்று குறித்த தீ விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
சுமார் அறுபது தளங்களைக் கொண்ட கிரிஷ் கட்டிடத்தின் 35ஆவது மாடியில் மரப் பலகைகளில் தீ விபத்து ஏற்பட்டு, அதன் கீழே உள்ள பல தளங்களுக்கும் குறித்த தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை தீயணைப்புத் துறையின் 32 அதிகாரிகள் கொண்ட குழு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சம்பவ இடத்தில் இருந்து தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
கிரிஷ் கட்டிடம் தொடர்பில் அண்மைய தினங்களாகவே பல சர்ச்சைக்குரிய விடயங்கள் மேலெழுந்து வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கிரிஷ் கட்டிடத்தில் 750 இலட்சம் நிதியை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து கடந்த காலங்களில் இடம்பெற்ற பல ஊழல், மோசடி சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியிலேயே, காணி மோசடி சம்பவம் தொடர்பில் யோஷித ராஜபக்சவும் கைது செய்யப்பட்டிருந்தார்.
யோஷித ராஜபக்சவின் கைதைத் தொடர்ந்து நாமல் ராஜபக்சவும் கைது செய்யப்படுவார் என அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைத்தது.
நாமல் ராஜபக்சவை அழைத்து வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே, நேற்று (06) இரவு சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் பல சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
