Friday, October 31, 2025 9:46 am
உலகில் முதன் முதலாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானம் ஒன்றை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. XQ-58A Valkyrie என பெயரிடப்பட்டுள்ள இப் போர் விமானம், விமானி இல்லாமல் இயங்கும் திறன் கொண்டது.
இராணுவத்துக்கு தேவையான உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களை உருவாக்கி வரும், அமெரிக்காவில் உள்ள ஷில்ட் (Shield AI) நிறுவனம், இந்த விமானத்தை உருவாக்கியுள்ளதாக சிஎன்பிசி (cnbc) என்ற அமெரிக்க செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இப் போர் விமானம், F-16 என்ற ஜெட் எஞ்சினின் தன்மை கொண்டது, 2,000 மைல் தூரம் வரை பறக்கும், 50,000 அடி வரை பறக்கும், செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் திறன் கொண்டது, கடலின் நடுவில் உள்ள ஒரு கப்பலில் இருப்பது போல ஓடுபாதை இல்லாமல் தொலைதூர இடங்களில் இயங்கக் கூடிய வலு உள்ளதாக என்று இதனை உருவாக்கிய நிறுவனம் கூறுகிறது.
விமானிகள் செலுத்தும் போர் விமானம் ஒன்றுக்குரிய அத்தனை அதி நவீன செயல்பாடுகளையும் தானாக இயக்கக் கூடிய முறையில் இப் போர் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது சாதாரண ட்ரோன் (Drone) போன்று அல்லாமல், மனித வலுவுடன் இயங்கக் கூடிய முறையிலான தயாரிப்பு என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் மனித வலுவுடன் இயங்கும் போர் விமானங்களைப் போன்று, இப் போர் விமானத்துக்கு ஓடுதளம் அவசியமில்லை.
இப் போர் விமானம், அமெரிக்க முப்படைகளின் போர் திறனை அதிகரிக்கும் எனவும், உலகில் உள்ள இராணுவ பயிற்சி நிலையங்கள் குறிப்பாக போர் விமான பயிற்சிகளிலும் முக்கிய தாக்கத்தை செலுத்தும் என்று, இந்த விமானத்தை தயாரித்த நிறுவனம் கூறியுள்ளது.
வரவுள்ள 2026 ஆம் ஆண்டு இப் போர் விமானம் இயக்கப்படும் எனவும், ஆனாலும் 2028 ஆம் ஆண்டுதான் இப் போர் விமானம் முழுமையாக சரிபார்க்கப்படும் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


