Tuesday, February 17, 2026 4:06 pm
அமெரிக்காவின் கருப்பின மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிப்போர் முனையிலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தடம் பதித்த ரெவரெண்ட் ஜெஸ்ஸி ஜாக்சன் இன்று தனது 84 ஆவது வயதில் காலமானார்.
சிகாகோவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினர் சூழ அமைதியாக அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1960-களில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியருடன் இணைந்து சிவில் உரிமைப் போராட்டங்களில் முன்னின்றவர். 1968 இல் கிங் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருடன் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காக 1984 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு, கருப்பினத்தவர் ஒருவரால் அமெரிக்க அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார்.
சமூக நீதி மற்றும் பொருளாதார சமத்துவத்திற்காக ‘ரெயின்போ புஷ்’ என்ற அமைப்பை நிறுவி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்தார்.
2017 ஆம் ஆண்டு அவருக்கு பார்கின்சன் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நரம்பியல் தொடர்பான உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

