Monday, March 9, 2026 1:48 pm
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் ‘நிபுணர்கள் அவை’ (Assembly of Experts) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானில் அதிகாரம் ஒரே குடும்பத்திற்குள் கைமாறுகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைவருக்கு விசுவாசமாக இருக்குமாறும், நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்குமாறும் ஈரானிய மக்கள், புத்திஜீவிகள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினருக்கு நிபுணர்கள் அவை அழைப்பு விடுத்துள்ளது.
1969 செப்டம்பர் 8 அன்று ஈரானின் மஷ்ஹாத் நகரில் பிறந்த இவர், அலி கமேனியின் ஆறு பிள்ளைகளில் இரண்டாமவர் ஆவார். தெஹ்ரானில் உள்ள ‘அலவி’ எனும் மதப் பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை நிறைவு செய்த மொஜ்தபா, தனது 17 ஆவது வயதில் ஈரான்-ஈராக் போரின் போது குறுகிய காலம் இராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

