Thursday, December 11, 2025 7:51 am
இலங்கைத்தீவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் ஜனாதிபதி என்ற பிரதான அடையாளங்களைக் கொண்ட கோட்டாபய ராஜபக்ச, யாழ் நீதிமன்றத்திற்கு நேரில் வருகை தந்து சாட்சியமளிக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்களை சத்தியக் கடதாசி மூலம் நீதிமன்றத்தில் நிரூபிக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகிய இரண்டு இளைஞர்கள், 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக சாட்சியம் வழங்க யாழ்ப்பாணம் வர முடியாது எனவும், மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.
இராணுவத்தினரால், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் என்ற இரண்டு இளைஞர்களும் 2011 ஆம் ஆண்டு தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக இந்த இரண்டு இளைஞர்களின் உறவினர்களால் ஆட்கொணர்வு மனு கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுமீதான விசாணையின்போது, கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீடடு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த அறிவுறுத்தலின் பிரகாரம், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் தொடர்சியாக நடைபெற்றன.
2017ஆம் ஆண்டு மனுவின் சாட்சிகள் பற்றிய பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் பிரதானமாக பதிவிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக நீதிமன்றத்தில் முன்லையாகி சாட்சியம் வழங்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி கோட்டாபய ராஜபக்ச யாழ் நீதிமன்றத்துக்கு செல்ல மறுத்திருந்தார். இந்த நிலையில் இன்று புதன்கிழமை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்கள் தொடர்ச்சியாக மறுத்து வந்த நிலையிலேயே இன்று கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மரண அச்சுறுத்தல் பற்றிய சத்தியக் கடதாசியை தனது சட்டத்தரணிகள் மூலம் கோட்டாபய ராஜபக்ச விரைவில் சமர்பிக்கவுள்ளார்.

