Monday, January 26, 2026 1:39 pm
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படுமாயின் அதற்கு முழுமையாக சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சருமே பொறுப்புக் கூற வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
சுகாதார அமைச்சருடன் முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது தமது முன்மொழிவுகளுக்கு அவர் எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்ததாகவும், எனினும் வாக்குறுதியளித்தவாறு அதனை நடைமுறைப்படுத்த தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படுமாயின் அதற்கு முழுமையாக சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சருமே பொறுப்புக் கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
வைத்தியத் தொழிலை விசேட சேவைப் பிரிவாகக் கருதி நிபுணத்துவ வைத்தியர்கள், தர வைத்தியர்கள் மற்றும் நிர்வாகத் துறையிலுள்ள வைத்தியர்களை இனங்கண்டு அவர்களுக்கு விசேட சம்பளக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சர் வாக்குறுதியளித்ததாகவும், அது பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்டு ஹன்சார்டில் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், இதுவரை அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் ஊடாக அவசர நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது எனவும், தமது சங்கம் நோயாளர்களின் உயிரை ஆபத்தில் வீழ்த்தாது எனவும் மேலும் தெரிவித்தார்.
நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று காலை 8.00 மணி முதல் ஈடுபட்டுள்ளது.

