Wednesday, January 21, 2026 3:03 pm
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.
மீனவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப அவர்களின் விருப்பத்தின் பேரில் ஓய்வூதியத் திட்டங்களைத் தெரிவு செய்ய முடிவது இதன் விசேட அம்சமாகும்.
புதிய கடற்றொழில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 60 வயதுக்குப் பின்னர் மாதாந்தம் ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 15,000, ரூ. 20,000, ரூ. 25,000 அல்லது அதற்கும் அதிகமான தொகையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மீனவர்கள் தாங்கள் விரும்பிய திட்டத்திற்குப் பங்களிக்க முடியும்.
60 வயதுக்குப் பின்னர் வரும் ஒவ்வொரு வயது எல்லைகளிலும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படுவது இந்தத் திட்டத்தின் மற்றுமொரு சிறப்பம்சம்.
உதாரணமாக, மாதாந்தம் ரூ. 1,000 ஓய்வூதியத்தைப் பெறும் திட்டத்திற்கு ஒருவர் பங்களிப்புச் செய்திருந்தால், அவருக்கு 64 – 70 வயது வரை ரூ. 1,250 ஓய்வூதியமும், 71 – 77 வயது வரை ரூ. 2,000 ஓய்வூதியமும், 78 வயதுக்குப் பின்னர் ரூ. 5,000 ஓய்வூதியமும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதன் மூலம் ஆயுள் காப்புறுதி நன்மைகள் கிடைத்தல், ஓய்வூதியம் பெறுபவர் உயிரிழந்தால் அவரது துணைவருக்கு (கணவன்/மனைவி) ஓய்வூதியம் உரித்தாதல் மற்றும் கடற்றொழில் சார்ந்த ஏனைய தொழில்களில் ஈடுபடுபவர்களும் இத்திட்டத்தில் இணைய முடிவது போன்றவை இதன் மேலதிக விசேட நன்மைகளாகும்.

