Tuesday, January 20, 2026 4:35 pm
டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு மண் சரிவு ஏற்பட்ட கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளந்தன்னை தோட்ட ஆலயவளாகத்தின் முன் சரிந்து வந்த கல் ஒன்றில் மாணிக்கம் ஒட்டி காணப்படுவதாக தோட்ட மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய கலஹா பொலிஸார் அப்பிரதேசத்தை சுற்றி வளைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து குறித்த பகுதிக்கு இன்று செவ்வாய்கிழமை வருகை தந்த தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபை குறித்த கல்லின் உண்மை தன்மையினை கண்டறிந்து கொள்வதற்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 11ம் மாதம் 27ம் திகதி நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக கலஹா தெல்தோட்ட பகுதியில் உள்ள சிறீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டு பாரிய கற்பாறைகள் சரிந்து வந்து ஆலய வளாகத்தில் தேங்கி நின்ற நிலையில், சரிந்து வந்த கற்பாறையில் மாணிக்ககல் தென்பட்டதாக பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கலஹா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு இது தொடர்பாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபைக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சுமார் ஒரு தொன் எடையுள்ள இந்தப் பாறையை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதிலுள்ள கல் இரத்தினக்கல்லா என்பதை இதுவரை உறுதி செய்யவில்லை. பாறை தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் வரை சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

