Tuesday, January 20, 2026 2:37 pm
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் முன்மொழியப்பட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான புதிய நடைமுறைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது 1350 ரூபாவாக உள்ள அவர்களின் நாளாந்த ஆகக்குறைந்த வேதனத்தை 1550 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் எனவும் தொழிலாளர்களின் நாளாந்த வருகையை ஊக்குவிப்பதற்காக மேலதிகமாக 200 ரூபா ஊக்கத்தொகையாக வழங்குவதற்குமான யோசனை முன்மொழியப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர் ஒருவருக்கு நாளொன்றுக்கு மொத்தமாக 1750 ரூபா வரை வருமானம் கிடைக்கும்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் மூலம் 5000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள ஊக்கவிப்புக் கொடுப்பனவுகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்படவுள்ளன.
முதலில் 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முதல் 6 மாத காலத்திற்கு அந்தந்த பெருந்தோட்ட நிறுவனங்கள் ஊடாக இந்த கொடுப்பனவு செலுத்தப்படும்.
தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனைகளை நடத்திய பின்னர் குறித்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை நேரடியாகத் தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த இந்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

