Tuesday, January 20, 2026 9:48 am
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்குள் தேங்கியுள்ள மழை நீரை எதிர்வரும் பெப்ரவரி 9ம் திகதியன்று நீதிமன்றம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெறும் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று காலை எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த அகழ்வு பிரதேசத்தை யாழ் நீதவான் நீதமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரைஞ்சன், ரனித்தா ஞானராஜா, குற்ற புலனாய்வு திணைக்களத்தினர், பொலிஸார் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் வெள்ள நீர் புகுந்து நிரம்பிக் காணப்படுவதனால் அகழ்வு பணிகளை உடனடியாக தொடங்க முடியாது என்றும் இந்த வெள்ள நீர் வற்றும் மட்டும் பார்த்து அகழ்வு பணியை ஆரம்பிக்க வேண்டும் அல்லது அந்த நீரை அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி நல்லூர் பிரதேச சபை மூலம் சட்ட வைத்திய வைத்திய அதிகாரி ஊடாக நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் வெள்ள நீரை அகற்றுவதற்கான நடவடிக்கைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.
வெள்ளநீரை அகற்றிய பின்னர் அகழ்வு பணி எப்போது நடைபெறும் என்பது தொடர்பான திகதி நிர்ணயிக்கப்படும். இந்த வழக்கு பெப்ரவரி 9-ம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிய நிலையில், சட்ட வைத்திய அதிகாரியால் மீண்டும் பாதீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அகழ்வு நடைபெறும் சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் ஏற்கனவே இருந்த பாதைக்கு மேலாக அதனை நல்லூர் பிரதேச சபையினர் செப்பனிட்டு இருக்கிறார்கள். குறித்த விடயம் சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
குறித்த பகுதியின் நிலப்பாங்கு தொடர்பான விடயத்தில் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்வதற்கான அனுமதியும் கொடுக்கக் கூடாது எனவும் முழுமையான அகழ்வு பணிகள் பூர்த்தியாகும் வரை நிலத்தோற்றத்தில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் இதில் எதிர்வரும் காலத்தில் எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தின் அனுமதி அவசியம் வலியுறுத்தப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

