Tuesday, January 13, 2026 3:08 pm
டேவிட் பாம்முக்கு ஹட்டனுக்கும் இடையிலான போடைஸ் வழியான பஸ் சேவை 30 வருடங்களுக்கு பின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஹட்டன் டிப்போ ஊடாக இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படுகிறது. இரண்டு தடைவைகள் டேவிட் பாமிலிருந்து டயகம அக்கரபத்தனை மன்ராசி ஊடாக ஹட்டனை இந்த பஸ் வந்தடையும்.

30 வருடங்களுக்கு முன் இயங்கிய இந்த பஸ் சேவையினை ஹொயிஸ் லைன், சந்திரகாமம், யரவல், டேவிட்பாம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
குறித்த பஸ் சேவை நிறுத்தப்பட்டதனால் அங்கிருந்து வைத்தியசாலை செல்லும் நோயாளர்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலுக்கு செல்பவர்கள் பொது மக்கள் என பலரும் அன்றாடம் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திடம் முன் வைத்த கோரிக்கைகளுக்கமைய குறித்த பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதற்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மகிழ்ச்சியடைவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
இன்று ஆரம்பிக்கப்பட்ட டேவிட் பாம் பஸ் சேவைக்கு ஹட்டன் போடைஸ் வீதியில் பொது போக்குவரத்தில் ஈடுப்படும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மக்களின் நன்மை கருதி எவ்வித தடையுமின்றி குறித்த பஸ் சேவை இடம்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஹட்டன் டிப்போவின் உதவி முகாமையாளர் எச்.ஏ.எஸ்.எஸ்.ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த ஆரம்ப நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர்கள், இராணுவ வீரர்கள், பிரஜாசக்தி அதிகாரிகள் ஹட்டன் டிப்போவின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

