Monday, January 12, 2026 12:32 pm
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை பத்தரமுல்லயில் உள்ள கல்வி அமைச்சிற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுடன் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது கல்வி அமைச்சரின் திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டவை என்றும், அவை நாட்டின் தேசியக் கல்வி முறையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர். “ஹரிணியின் தவறான கல்விச் சீர்திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெறு” மற்றும் “பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பகடைக்காயாக்கும் கல்வி அமைச்சரே பதவியை விட்டு விலகு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் தரையில் அமர்ந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கல்வி அமைச்சரை விமர்சிக்கும் வகையிலான கேலிச்சித்திரங்கள் மற்றும் “Harini Go Home” போன்ற வாசகங்கள் அடங்கிய பாரிய பதாகைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கல்வித் துறையில் அரசாங்கம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள் இந்தச் சீர்திருத்தங்கள் உடனடியாக நிறுத்தப்படும் வரை தமது போராட்டங்கள் தொடரும் எனவும் எச்சரித்தனர்.

