Wednesday, January 7, 2026 12:19 pm
2 பில்லியன் டொலர் மதிப்புள்ள வெனிசுவேலா மசகு எண்ணெய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு “முழுமையான அணுகலை” வழங்க இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் விரும்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
புதிய உடன்பாடு மூலமாக வெனிசுவேலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரை அனுமதிக்கப்பட்ட மசகு எண்ணெயை அமெரிக்காவிற்கு ஒப்படைக்கும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.
இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும். அந்த பணம் அமெரிக்க ஜனாதிபதியாக என்னால் கட்டுப்படுத்தப்படும். இதனால் அது வெனிசுவேலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவது உறுதிபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெரிய அளவிலான எண்ணெயை வழங்குவதன் மூலம் வெனிசுவேலாவின் சொந்த எண்ணெய் கையிருப்பு குறையும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வெனிசுவேலா அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் அமெரிக்க அழுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த முற்றுகை காணப்படுகின்றது.

