Friday, January 2, 2026 12:25 pm
2026ம் ஆண்டில் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படாது என கல்வி அமைச்சு நேற்று வியாழக்கிழமை (01) தெரிவித்துள்ளது.
அதன்படி 2026ம் ஆண்டில் 5-13 ம் வகுப்புகளுக்கான பாடசாலை நேரம் வழமை போன்று காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் எனவும், ஒவ்வொரு பாடவேளைக்காகவும் 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களின் முதல் தவணை ஜனவரி 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் , 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதி 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி சீர்திருத்த செயற்பாட்டிற்கமைவாக 6ம் தரத்திற்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21ம் திகதி முறையாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 5 தரம் 1 க்கான குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களிற்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29ம் திகதி முறையாகத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான சுற்றறிக்கை இன்று வெள்ளிக்கிழமை (2) வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாகவும் மற்றும் பல மாகாணங்களில் பாடசாலை அமைப்பு மற்றும் போக்குவரத்து அமைப்புக்கு ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

