Wednesday, December 31, 2025 1:51 pm
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் மற்றும் ஓய்வுபெற்ற கேணல் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிள் தனியார் பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் எச். எம். சரத் விஜேசேன உயிரிழந்த நிலையில், இவருடன் பயணித்த ஓய்வுபெற்ற கேணல் படுகாயமடைந்துள்ளார்.
உயிரிழந்த பிரிகேடியரும் காயமடைந்த கேணலும் தொழில் நடவடிக்கைக்காக காலி பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் பண்டாரகம – கெஸ்பேவ வீதியில் சென்று கொண்டிருந்த வேளை மத்துகம நோக்கிச் சென்ற தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் வீதியின் 100 மீற்றருக்கும் அதிகமான தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு, பண்டாரகம பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


