Wednesday, December 31, 2025 1:15 pm
கொழும்பு மாநகர சபையின் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பற்றிய மாநகர சபை கூட்டம் இன்று புதன்கிழமை (31) காலை 10 மணிக்கு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தலைமையில் நடைபெற்றது.
அதற்கமைவாக 2026ம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதோடு, இந்த வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் அடிப்படையில் , 2 மேலதிக வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
கொழும்பு மாநகர சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் கடந்த டிசம்பர் 22ம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் மட்டுமே கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

