Wednesday, December 31, 2025 12:19 pm
வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் சுற்றுலா விருதுகள் – 2025 மற்றும் ‘இராமாயணம்’, ‘முருகன்’ ஆகிய ஆன்மீகச் சுற்றுலாத் தடங்கள் தொடர்பான நூல் வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (30.12.2025) மாலை, யாழ்ப்பாணம் ஜே ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டார்.மேலும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ,வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் , அபிவிருத்தி மற்றும் ஆய்வுப் பணிப்பாளர் ,வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், வடக்கின் சுற்றுலாத்துறை விருத்தி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர்,
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வருகின்ற போதிலும் போதியளவான பயிற்றப்பட்ட ஆளணிகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும், இருப்பினும் தற்போதைய இளைய சமூகம் சுற்றுலாத்துறை சார் தொழில் வாய்ப்புகளில் அக்கறை காட்டி வருகின்றமையால் எதிர்காலத்தில் சுற்றுலாத்துறை மேலும் விரிவடையும் எனவும், அதற்கான வேலையாட்களை இங்கிருந்தே வழங்கக்கூடிய வாய்ப்பு உருவாகும் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் மறைந்து கிடக்கும் பொக்கிஷங்கள், புராதனத் தலங்கள், அமைதி தவழும் கடற்கரைகள் மற்றும் உயிரோட்டமுள்ள பாரம்பரியங்களை மிக அழகாக வெளிப்படுத்தும் வகையில் ‘முருகன் ஆன்மீகச் சுற்றுலாப் பாதை’ மற்றும் ‘இராமாயண ஆன்மீகச் சுற்றுலாப் பாதை’ ஆகிய இரண்டு முக்கிய நூல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் உண்மையான சாராம்சத்தை ஆழமாக ஆராய்ந்து அனுபவிப்பதற்குத் தூண்டும் விலைமதிப்பற்ற வழிகாட்டிகளாக இவ் வெளியீடுகள் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்தும், சர்வதேசத்திலிருந்தும் வருகை தரும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதில் வடமாகாண சுற்றுலாத்துறையானது இன்றியமையாத பங்களிப்பைச் செலுத்துகின்றது எனவும் இது நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, நமது நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினதும் காங்கேசன்துறை துறைமுகத்தினதும் அபிவிருத்தி பணிகள் நிறைவடையும்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் எனக் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்கும்போது, அந்தத் தேவையை ஈடுசெய்யும் வகையில் முதலீட்டாளர்களால் புதிய ஹோட்டல்கள் மற்றும் தங்குமிட வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் சுற்றுலாத்துறை சார்ந்து வளர்ச்சியடைந்து வரும் இவ்வாறான வாய்ப்புகளை எமது மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இறுதியாக இந்நிகழ்வில் சுற்றுலா வழிகாட்டி நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் , சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்குச் சிறப்பாகப் பங்களிப்புச் செய்தவர்களுக்கு விருதுகளும் கௌரவிப்புகளும் வழங்கப்பட்டன.


