Tuesday, December 30, 2025 1:59 pm
இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று (30) செவ்வாய்க்கிழமை காலமானார்.
நியூஸிலாந்தில் 2010ல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ, 2018 டிசம்பர் 28ம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரையில் நடைபெற்ற பயிற்சியை முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது அருகிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
2010ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அக்ஷு பெர்னாண்டோ 52 ஓட்டங்களை குவித்ததோடு , தனுஷ்க குணதிலக்க , பானுக்க ராஜபக்ஷ , கித்ருவன் வித்தானகே ஆகியோருடன் விளையாடிய பெருமை இவரைச் சாரும்.
மேலும், பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வி கற்ற அக்ஷு பெர்னாண்டோ 13, 15, 17 வயதுகளுக்குட்பட்ட அணிகளின் தலைவராகவும் , 19 வயதுக்குட்பட்ட அணியின் உப தலைவராகவும் , அத்துடன் விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் பெர்னாண்டோ மிகச் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் காணப்பட்டார்.
இன்று அவர் இறந்தது கிரிக்கெட் சமூகத்தினருக்கு பாரிய இழப்பாகும். இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் , உயிரும் துரதிர்ஷ்டவசமாக அகால முடிவுக்கு வந்ததையடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

