Friday, December 26, 2025 10:34 am
சுனாமிப் பேரலை இலங்கையைத் தாக்கி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.
கடந்த 2004 – டிசம்பர் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இலங்கைத்தீவு உட்பட பல நாடுகளில் சுனாமி ஏற்பட்டது.
இதனால் இலங்கையில் சுமார் 3500க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு , 5000 பேர் காணாமலும் போயுள்ளனர். அத்துடன் ஏராளமான சொத்துக்கள் அழிந்தும் போயிருக்கின்றன.
சுனாமியில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் , 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி அவர்களின் நினைவு தினமாக கொண்டாடப்படுகின்றது.
இந்த ஆண்டு தேசிய பாதுகாப்பு தினம் சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் மாவட்ட மட்டத்தில் பல சர்வமத நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
சுனாமிப் பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை அனைத்து கடலோர பகுதிகளிலும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் , “தேசிய பாதுகாப்பு தின” நினைவுகூரல் நிகழ்வு இன்று (26) காலை 8.30 மணி முதல் காலை 11.00 மணி வரை காலி, பெராலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


