Saturday, December 20, 2025 2:46 pm
2025க்கான தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று தினம் (19) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தில் ஆரம்பமானது.
இவ் விளையாட்டு விழா சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிது சமன் ஹேன்னாயக்க ஆகியோரின் தலைமையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் சுபுன் விஜேரத்ன அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இன்று சனிக்கிழமை (20) தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் ,இதன் நிறைவு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (21) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் தினிது சமன் ஹேன்னாயக்க அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய கூட்டு முயற்சி ,சுறுசுறுப்பு இளைஞர் சக்தி ‘யூத் கிளப்’ அமைப்பிடமே உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளதோடு , இவர்களுடன் இணைந்து அரசாங்கமும் செயற்படும் எனவும் கூறியுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன உரையாற்றுகையில் “திறமை என்பது ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவது மட்டுமல்ல , நாம் வீழ்ச்சியடையும் போது எவ்வளவு விரைவாக மீண்டும் எழுகிறோம் என்பதாகும்” எனக் குறிப்பிட்டார்.
மேலும் , அனர்த்தங்களிலிருந்து நாடு மீண்டும் எழுவதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றும் , தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025 ஐ நடத்துவது நாடு நாடாக மீண்டும் எழுவதற்கான ஒரு படி எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி , தேசிய இளைஞர் கழகங்களின் சம்மேளனச் செயலாளர் மிதின கிஹான் பிரியசாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான இளைஞர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
தேசிய இளைஞர் விளையாட்டு விழா, இளைஞர்களின் ஆற்றலை வெளிக்கொணரவும், அவர்களை விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கச் செய்யவும் ஒரு முக்கிய தளமாக அமைகிறது . இது மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான போட்டியின் மூலம் தேசிய அளவில் விளையாட்டுத் தரத்தை உயர்த்துவதுடன், இளைஞர்களை ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான குடிமக்களாக உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

