Thursday, December 18, 2025 12:14 pm
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தம் தொடர்பான விசேட அமர்வு நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
இன்று (18) இடம்பெற்ற நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டுக்கான மூன்று சட்டமூலங்களை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதன்படி , சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் , பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தியிருப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (18) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலமானது , 2022ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்தச்)சட்டத்தைத் திருத்துவதை பிரதான நோக்காகக் கொண்டதாகும். இச்சட்டமூலம் 09.10.2025ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 05.12.2025ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் , 05.12.2025ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக 2வது வாசகம் திருத்தப்படுகிறது.
இதற்கமைய ,
2023 ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் 2025 ஒக்டோபர் 1ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு மட்டும் ஏற்புடையதான பத்து சதவீதத்திலான மொத்தச் சேகரிப்பை மட்டுப்படுத்துவது , 2025 ஒக்டோபர் 1ஆம் திகதியிலிருந்து குதிரைப் பந்தயப் பணயக்காரர் என்ற தொழிலில் அல்லது சூதாட்டத் தொழிலில் ஈடுபட்ட ஆட்களிடமிருந்தான மொத்தச் சேகரிப்பு அறவீட்டைப் 18 சதவீதமாக அதிகரித்தல் ,இலங்கைப் பிரஜைகளாகவுள்ள ஆட்களிடமிருந்து கெசினோ நுழைவு அறவீடானது 100 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக அதிகரித்தல் என்பன இத்திருத்தத்தின் நோக்கமாகும்.
அதேநேரம் , 14.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 05.12.2025ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலமானது , 2008ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்ட சட்டமூலத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமாகும்.
இத்திருத்தமானது , திட்டங்களை அடையாளம் காணுவதற்கான புதிய நடைமுறையாக அதிகபட்ச விலக்களிப்புக் காலத்தை 25 ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாகக் குறைத்தல் , உத்தேசிக்கப்பட்ட கருத்திட்டத்தை ஒரு செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டமாக அடையாளம் காண்பதன் மேல் , இலங்கை முதலீட்டுச் சபையானது அத்தகைய கருத்திட்ட உத்தேசத்தை நிகழ்வுக்கு முன்னரான செலவு நன்மைப்பகுப்பாய்வுக்காக நிதி அமைச்சுக்கு ஆற்றுப்படுத்துதல் ,அத்தகைய நிகழ்வுக்கு முன்னரான செலவு நன்மைப்பகுப்பாய்வை நிறைவேற்றுதல் , இணங்கி ஒழுகாமையின் போது இச்சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விலக்களிப்புகள் , சலுகைகள் அல்லது வாிவிடுமுறை எவற்றையும் அல்லது எல்லாவற்றையும் மட்டுப்படுத்துதல் அல்லது சம்பந்தமாக ஏற்பட்ட இழப்பை அறவிடுவதற்கு நிர்வாகத் தண்டங்களை விதித்தல் , வரிச் செலவினங்கள் மீதான வருடாந்த அறிக்கையொன்றினை வெளியிடுவதற்கு நிதி அமைச்சினைத் தேவைப்படுத்துவதன் மூலம் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துதல் என்பன இந்தத் திருத்தங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கமைய , இவ் மூன்று சட்டமூலங்களும் முறையே 2025ஆம் ஆண்டு 24ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமாகவும் , 2025ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பந்தய , சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமாகவும் , 2025ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமாகவும் அமுலுக்கு வருகின்றன.

