Saturday, December 13, 2025 2:29 pm
அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத இம்முற்பணக் கொடுப்பனவானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அவ்வருடம் பெப்ரவரி மாத இறுதித் தினத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டாரவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இந்தச் சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இந்த முற்பணம் வழங்கப்படுவது வழக்கமாகும்.
இக் குறித்த முற்பணத் தொகையானது 8 சதவீத வருடாந்த வட்டியுடன், 10 சமமான மாதத் தவணைகளில் அறவிடப்பட வேண்டும் எனப் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

