Thursday, December 11, 2025 11:30 am
டித்வா புயல் , மண் சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தின் பின்னர் மக்களுக்கு
ஏற்பட்ட பாதிப்பினை ஈடு செய்வதற்கு அரசாங்கம் பல்வேறு வகையான உதவித்திட்டங்களை
வழங்குவதாக அறிவித்தது.
அதன்படி , புயலினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் நிதி உதவி பெற தகுதியானவர்களின் பெயர் விபரம் நேற்று (10) புதன்கிழமை முதல் பிரதேச செயலக ரீதியாக காட்சிப்படுத்தப்பட்டன.
டித்வா புயலினால் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்றால் , அது தொடர்பில் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தில் 30 ஆம் இலக்க அறையில் இயங்கும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதனை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட எவரேனும் ஒருவரின் பெயர் இணைக்கப்படாது இருந்தால் அல்லது தவறான வழியில் எவரேனும் ஒருவரின் பெயர் இணைக்கப்பட்டு இருந்தால் , ஆதாரங்களுடன் அவை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு கூறப்பட்டது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் இது தொடர்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அனர்த்தத்தின் போது யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க மறுத்த கிராம சேவையாளருக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் .பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் உள்ள புதிய வீட்டு திட்டத்தில் வசிக்கும் 16 வயதான மாணவனே இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் தந்தை இல்லாத நிலையில் , தாயுடன் கல்லுண்டாய் புதிய வீட்டு திட்ட பகுதி வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மாணவனின் தாயார் வேலை நிமர்த்தமாக கொழும்பில் தங்கியுள்ளதாகவும் ,தான் தனியே அந்த வீட்டில் இரவு நேரங்களில் தங்க முடியாததால் , குருநகர் பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்குவதாகவும் தெரிவித்துள்ளார் .
இந்த நிலையில் மழை ஆரம்பித்தால் அவர்களது வீடு வெள்ளத்தில் மூழ்குவது வழமையானது. அதனால் மழை ஆரம்பித்ததால் ,தான் தொடர்ச்சியாக பெரியம்மா வீட்டில் தங்கியிருந்ததாகவும் தமது வீட்டினுள் வெள்ளம் சென்று இருந்தது எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் , பேரிடரால் தமது வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் , அரசாங்கத்தால் வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்காக தமது பகுதி கிராம சேவையாளரிடம் பதிவுகளை மேற்கொள்ள சென்ற வேளை அவர் பதிவுகளை ஏற்கவில்லை.
வெள்ளம் ஏற்படும் போது , வீட்டில் எவரும் வசிக்கவில்லை என கூறி அவர்களது பதிவை பதிய மறுத்துள்ளார். ஆனால் அவர்கள் வீட்டு அயலவர்கள் சிலரும் வெள்ளம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அங்கிருந்து வெளியேறி உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்ததாகவும் ,அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமது குடும்பத்தை மாத்திரமே கிராம சேவையாளர் திட்டமிட்டு புறக்கணித்துள்ளதாகவும் மாணவன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மாணவனின் தாய் மேலதிகாரிகளுடன் கதைத்த போதிலும் , வீட்டில் வசிக்கவில்லை என கூறி நிதியுதவி மறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமக்கு அந்த நிதியுதவியை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக மாணவன் மேலும் தெரிவித்துள்ளார்.

