Wednesday, December 10, 2025 8:09 pm
இலங்கைத்தீவில் டித்வா புயலினால் பாதிப்புகளை சீர் செய்யும் நோக்கில் ரசியா இன்று புதன்கிழமை நண்பகல் சரக்கு விமானம் மூலம் 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
ஒரு நடமாடும் மின் நிலையம், தற்காலி தங்குமிடக் கூடாரங்கள், மற்றும் தாவர எண்ணெய், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் ரசிய சரக்கு விமானம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
கொழும்பில் உள்ள ரசிய தூதுவர் லெவன் தாகரியன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, விமான நிலையத்தில் உதவிப் பொருட்களை பெற்றுக் கொண்டதுடன் ரசிய பணியாளர்களையும் வரவேற்றனர்.
இலங்கைத்தீவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் வளர்ச்சியடைந்த நாடுகள் தொடர்ச்சியாக உதவிகளை வழங்குகின்றன.
இதுவரை 800 மில்லியனுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் கிடைத்துள்ளதாகவும், நன்கொடைகளும் கிடைப்பதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க, சீனா, இந்தியா மற்றும் ரசியா போன்ற நாடுகள் ஏட்டிக்குப் போட்டியாக உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு போன்ற நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளன.

