Tuesday, December 9, 2025 7:59 pm
சீன – ரசிய இராணுவத்தினர் 10 ஆவது கூட்டு வான் மூலோபாய ரோந்துப் பணியை கிழக்கு சீனக் கடல் மற்றும் மேற்கு பசுபிக் பெருங்கடலில் நடத்தியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இந்த மூலோபாய இராணுவ பரீட்சாத்த நடவடிக்கை இடம்பெற்றதாக சீன பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதாக குளோபல் ரைமஸ் (globaltimes) என்ற ஆங்கில செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
கிழக்கு சீனக் கடல் மற்றும் மேற்கு பசுபிக் பெருங்கடல் பரப்பிலும் அதன் வான்வெளியிலும் கூட்டு இராணுவ செயற்பாடு பரீட்சிக்கப்பட்டதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரசிய – உக்ரெய்ன் போர், இஸ்ரேல் காசா போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாய அறிக்கையை ரசிய வரவேற்றுள்ள நிலையிலும் இந்த கூட்டு இராணுவ செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு சீனக் கடல் மற்றும் மேற்கு பசுபிக் பெருங்கடலில் மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ ஒத்திகை வருடாந்த நடவடிக்கை என சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனாலும் தற்போதைய புவிசார் அரசியல் – பொருளாதார மற்றும் இராணுவப் போட்டிச் சூழலில் நடத்தப்பட்ட சீன – ரசிய இராணுவ கூட்டு செயற்பாடு சர்வதேச ஊடகங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
ரசியாவும் சீனாவும் தங்கள் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை சீராக பலப்படுத்தி வருகின்றன. இந்த முன்னேற்றங்கள் கூட்டு இராணுவப் பயிற்சிகள், நிறுவன ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்கள் மற்றும் அவற்றின் வளர்ந்து வரும் கூட்டு தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் காணப்படுகின்றன,
உக்ரெயன் மீதான ரசியாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு, ரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள் எண்ணிக்கை, அளவு மற்றும் புவியியல் வரம்பில் கூர்மையாக விரிவடைந்துள்ளன.
தரை, கடற்படை, வான்வழி மற்றும் பல டொமைன் செயல்பாடுகளை உள்ளடக்கிய 2003 ஆம் ஆண்டு முதல் ரசியாவும் சீனாவும் 90 இற்கும் மேற்பட்ட கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தியுள்ளன. இவற்றில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு 2022 ஆண்டு பெ்ரவரி மாதம் முதல் நடைபெற்றுள்ளன.

