Sunday, December 7, 2025 4:38 pm
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளும் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து உரையாடியுள்ளன. யாழ்ப்பாணம், மாட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.ரவீந்திரா, முருகேசு சந்திரகுமார், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாகாண சபைத் தேர்தலலை நடத்துவது மற்றும் மாகாண எல்லை மீள் நிர்ணயம் பற்றிய விடயங்களில் அநுர அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என்பது பற்றியும், அடுத்த கட்டமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக சேர்ந்து மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.

