Sunday, December 7, 2025 4:36 pm
இந்தியாவின் கோவா மாநிலத்தின் கடலோரப் பகுதியில் அமைந்தள்ள பிரபல இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதாக என்டிரிவி (NDTV) செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், வடக்கு கோவாவின் அர்போராவில் உள்ள கிளப்பில் ஊழியர்கள் என்று நம்பப்படுகிறது, அதே நேரத்தில் இறந்தவர்களில் சுற்றுலாப் பயணிகளும் உள்ளனர்.
நேற்று சனிக்கிழமை நள்ளிரவில், அதாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிளப்பின் சமையலறையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் அந்த இடத்தில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ முக்கியமாக தரைத்தளத்தில் உள்ள சமையலறை பகுதியைச் சுற்றியே அதிகளவில் பரவியுள்ளதாக கோவா பொலிஸ் தலைமை இயக்குநர் அலோக் குமார் கூறினார். ஞாயிறு அதிகாலை தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினர்.
மூன்று பேர் தீக்காயங்களால் இறந்ததாகவும், மற்றவர்கள் மூச்சுத் திணறலால் இறந்ததாகவும் கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை செய்தியாளர்களிடம் கூறினார்.
மூன்று முதல் நான்கு” சுற்றுலாப் பயணிகள் இறந்துவிட்டனர், ஆனால் அவர்களின் வயது அல்லது எந்த நாடு என்பதை அறியமுடிவில்லை என்று அவர் கூறினார்.
நாடு முழுவதிலுமிருந்து நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் கோவாவில் உள்ள வெவ்வேறு கிளப்புகளில் வேலை செய்வதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கோவா தீ விபத்து மிகுந்த கவலை தருவதாக பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, கடலோரப் பகுதியின் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான பாகாவில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் என்ற கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் (indian express news) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பகுதியில் சுமார் 5.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருகை தந்துள்ளனர், வெளிநாட்டிலிருந்து 270,000 பேர் வருகை தந்துள்ளதாக இந்திய மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

