Friday, December 5, 2025 3:19 pm
யாழில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம் வியாழக்கிழமை (04), மாலை 5.30 மணியளவில் யாழ். காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியில் சேவையில் ஈடுபடுகின்ற பேருந்தொன்றில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் அருகே குறித்த இளைஞன் பேருந்தில் ஏறி பயணித்துள்ளதாகவும், அவர் 100 ரூபாவைக் கொடுத்து நடத்துனரிடம் பலாலி சந்தி எனக் குறிப்பிட்டு ரிக்கெற் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், நடத்துனர் மீதி 10 ரூபாவை இறங்கும் போது தருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்போது குறுக்கிட்ட இளைஞர் 70 ரூபாய் ரிக்கெட்டுக்கு எதற்கு 100 ரூபாய் வாங்குகிறாய் என நடத்துனரிடம் கடுமையாக முரண்பட்டுள்ளார்.
அதற்கு நடத்துனர் எங்களுக்கு பயணிகளிடம் கூடுதலாக பணம் அறவிட வேண்டிய அவசியமில்லை, பேருந்தின் கதவுக் கண்ணாடியில் கட்டண விளக்கம் ஒட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெளிவடையுமாறு கூறியுள்ளார்.
கோண்டாவில் சந்தியில் மீண்டும் குறித்த இளைஞர் முரண்பட்டதனை தொடர்ந்து 100 ரூபாவை இளைஞரிடம் வழங்கிய நடத்துனர், தங்கள் பேருந்தில் இருந்து இறங்கி பின்னுக்கு வரும் பேருந்தில் ஏறி வருமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து கையில் வைத்திருந்த தலைக்கவசத்தால் நடத்துனரைத் தாக்கி, பேருந்தின் படியில் இருந்து அவரை கீழே தள்ளி விழுத்தியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த கோப்பாய் பொலிஸார் இரு தரப்பையும் விசாரித்ததனை தொடர்ந்து குறித்த இளைஞரை கைது செய்து, இன்று வெள்ளிக்கிழமை (05) நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

