Thursday, December 4, 2025 9:12 am
இந்திய திரையுலகின் பிரபல மூத்த படைப்பாளி சரவணன் காலமானார். ‘நானும் ஒரு பெண்’ ‘சம்சாரம் அது மின்சாரம்’ ‘‘சிவாஜி’ ‘வேட்டைக்காரன்’ ‘மின்சார கனவு’ ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவன உரிமையாளரான சரவணன், தமிழ் திரையுலகின் பாடப்புத்தகமாக திகழ்ந்தார்.
ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு பின்னர் அந்த நிறுவனத்தை செயற்படுத்தி வந்த அவரது மகனான ஏவிஎம் சரவணன் 86 வயதில் இன்று வியாழக்கிழமை அதிகாலை காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.
தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் அவரது புகழுடல் மக்களின் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களும் அவரது புகழுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு ஏ.வி.எம். மயானத்தில் அவரது புகழுடல் தகனம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர். இந்திய தொலைக்காட்சிகளில் இவருடைய மரணம் தொடர்பான செய்திகள் அவருடைய வாழ்க்கைக் குறிப்புகள் பற்றிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

