Wednesday, December 3, 2025 4:09 pm
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்டுள்ள அந்த வெற்றிடத்திற்கு வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான என்.டி.எம்.தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று செவ்வாய்க்கிழமை (02) வெளியிடப்பட்டுள்ளது.
கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவராகவும், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினராகவும் இருந்து, புத்தளம் மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த என்.டி.எம்.தாஹிர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் புத்தள மாவட்டத்திலிருந்து தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் இரண்டாவது உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

