Tuesday, December 2, 2025 8:20 pm
டித்வா புயிலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத்தீவுக்கு உதவிகள் – நிவாரணங்கள் வழங்குவதில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முரண்பட்டுள்ளன. தமது புவிசார் அரசியல் நோக்கு அடிப்படையில் இந்த முரண்பாடுகள் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக மனிதாபிமான முறையில், பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல விடாமல், இந்தியா தொடர்ந்து தடுத்து வருவதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சு நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு இன்று செவ்வாய்கிழமை சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது
இலங்கைக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து தடுத்து வருகிறது. மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் பாகிஸ்தானின் சிறப்பு விமானம், இந்தியா வான்பரப்பில் பறப்பதற்கான விமான அனுமதிக்காகக் காத்திருக்கிறது.
சுமார் 60 மணித்தியாலத்துக்கும் மேலாக தாமதம் ஏற்படுகின்றது. இதன் மூலம் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கும் நிவாரண பணியை இந்தியா திட்டமிட்டு தடுக்கிறது என அப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
48 மணி நேரத்துக்குப் பின்னர் வழங்கப்பட்ட அனுமதி மூலமாக ஒரு தொகுதி நிவாரண உதவிகளுடன் பாகிஸ்தான் விமானம் இலங்கைக்குச் சென்றது. ஆனால் திரும்பிவரும் அனுமதியில் சிக்கல் ஏற்பட்டது. ஆகவே திட்டமிட்டு வான்பரப்பு அனுமதியை இந்தியா தாமதப்படுத்தி இலங்கைக்கு வழங்கும் உதவிகளை நிறுத்த முற்படுவதாக அந்த சமூக ஊடக பதவில் குற்றம சுமத்தப்பட்டுள்ளது.

