Tuesday, December 2, 2025 4:50 pm
டித்வா புயல் இலங்கையில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. கனமழை மற்றும் புயல் காரணமாக இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மீண்டும் தனது செயல்களால் கேலி மற்றும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவி வழங்குவதாக தெரிவித்து காலாவதியான பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பாகிஸ்தான் இலங்கைக்கு உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது, இது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
நிவாரணப் பொருட்களின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட இலங்கையில் உள்ள பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயம், “இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கு பாகிஸ்தானில் இருந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன” என தெரிவித்திருந்தது.
இந்தப் புகைப்படங்களை பார்த்த பயனர்கள் பொருட்களின் காலாவதி திகதியை கவனித்துள்ளனர். அதில் ‘ஒக்டோபர் 2024’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் கடும் கேலிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பதிவிற்கு பதிலளித்துள்ள பயனர் ஒருவர், “குப்பைகளை குப்பைத் தொட்டியில் வீசுவதற்குப் பதிலாக, பாகிஸ்தான் தனது காலாவதியான உணவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அனுப்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

