Tuesday, December 2, 2025 2:42 pm
அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வென்னப்புவ, லுணுவில பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டரில் உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் 4ம் திகதி முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் லுணுவில பிரதேசத்திற்கு அருகில் இருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகி சியம்பலாப்பிட்டிய உயிரிழந்துள்ளார்.
மேலும் , இவர் நவம்பர் 30ம் திகதி முதல் விங் கமாண்டர் பதவியிலிருந்து குரூப் கெப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து ஏற்பட்ட சமயத்தில் விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் ஹெலிகொப்டரில் இருந்ததாகவும்,பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தரவுகள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி சியம்பலாப்பிட்டிய 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானம் ஓட்டிய அனுபவமுள்ள விமானி என்பதும் தெரிய வந்துள்ளது.
இறுதியாக அவரது உடல் இன்று (02) லுணுவிலவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன் பின்னர் இன்று மாலை இரத்மலானையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் , இறுதிச் சடங்குகள் டிசம்பர் 4ம் திகதி முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெற உள்ளதாகவும் இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

