Tuesday, December 2, 2025 11:07 am
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தானின் விமானத்திற்கு இந்தியா விரைவான அனுமதி வழங்கியுள்ளதாக என்டிரீவி (ndtv) செய்திச் சேவை இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், இந்திய வான்வெளியைப் பயன்படுத்த புதுடில்லி அனுமதி மறுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் பரவிய ஆதாரமற்ற மற்றும் தவறான கூற்றுக்களையும் அந்த செய்தி நிறுவனம் நிராகரித்துள்ளது.
இந்திய வான்வெளி ஊடாக ஒரே நாளில் விமானம் பறக்க அனுமதி கோரப்பட்டது. கோரிக்கையின் நோக்கம் – இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது என பாகிஸ்தான் விளக்கமளித்திருந்தது. அதற்கு நான்கு மணித்தியாலங்களில் இந்தியா உடனடியாக அனுமதி வழங்கியது.
இந்த அனுமதி முற்றிலும் மனிதாபிமான நடவடிக்கை என்று இந்திய வான்பரப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
புயலினால் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்பில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இலங்கை முழுவதும் 350 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, புயலின் பின்னர் ஒப்பரேஷன் சாகர் பந்து (Operation Sagar Bandhu) நடவடிக்கையின் ஊடாக இந்தியா 53 தொன் நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
கொழும்பில் உள்ள இரண்டு இந்திய கடற்படைக் கப்பல்களில் இருந்து 9.5 தொன் அவசர உணவுப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. கூடாரங்கள், தார்பாய்கள், போர்வைகள், சுகாதார கருவிகள், உண்ணத் தயாரான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக இந்திய விமானப் படையின் மூன்று விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஐந்து பேர் கொண்ட இந்திய மருத்துவக் குழுவும் இலங்கையில் பணியாற்றி வருகின்றது.
இந்திய வான்பரப்பின் ஊடாக பாகிஸ்தான் விமானங்கள் பறக்க கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக புதுடில்லி தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

