Monday, December 1, 2025 3:24 pm
இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்கு நிவாரணமளிக்கும் வகையில், ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
‘டித்வா’ சூறாவளியால் பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, அவசர தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜப்பான் அரசு ஒரு சர்வதேச அவசர உதவிக் குழு மற்றும் மருத்துவக் குழுவை அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) அனுப்பிய மதிப்பீட்டுக் குழு, பாதிக்கப்பட்ட பகுதிகளின் மருத்துவத் தேவைகள் மற்றும் பிற அவசர தேவைகளை ஆய்வு செய்து பரிந்துரை செய்ததையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட 31 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சர்வதேச அவசர உதவிக் குழு இம் மாதம் 3 ஆம் திகதி ஜப்பானிலிருந்து இலங்கைக்குப் புறப்பட உள்ளது.
ஜப்பானின் மனிதாபிமானக் கொள்கைகள் மற்றும் இலங்கையுடன் கொண்டுள்ள நீண்டநாள் நட்பு உறவை முன்னிறுத்தி, மருத்துவக் குழு இத்தகைய விரைவான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த உதவிக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு JICA நிறுவனத்தின் ஊடாக அவசர சிகிச்சை, மருத்துவ உதவி மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

