Monday, December 1, 2025 7:14 am
டித்வா புயிலினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மக்களின் இடப்பெயர்வு போன்ற பல காரணங்களினால், தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய ஆபத்துகள் இருப்பதாக, இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனைகளை பெறுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தொற்று நோய்கள் பரவும் ஆபத்துகள் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்தல், பாதுகாப்பான உணவுவை வழங்குதல், அத்தியாவசிய சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சுத்தமான குடிநீர் விநியோகம், அவசர சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்கிவருவதோடு, கழிவு மேலாண்மைத் தொடர்பிலும் சங்கம் பங்களிப்பை வழங்கி வருகிறது.
தொற்றுநோய், எலிக்காய்ச்சல் என்பன விரைவாகப் பரவுவதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். சீரற்ற காலநிலைக்குப் பின்னரான சூழ்நிலையில் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பெற வேண்டும்.
இலங்கை முழுவதிலும் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபடுவார்கள் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

