Monday, December 1, 2025 7:13 am
டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கைத்திவின் பல பகுதிகளிலும் சிக்கித் தவித்த சுமார் 750 இந்திய பிரஜைகளை, சாகர் பந்து நடவடிக்கையின் மூலம் இந்தியா பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது. வணிக விமானங்கள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் வெளியேற்றம் தொடர்வதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட இலங்கை குடும்பங்களுக்கு உதவ இந்தியா தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டும் வருகிறது.
நேற்று சனிக்கிழமை இந்திய சேடக் ஹெலிகாப்டர்கள் சிக்கித் தவித்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றது, இன்று ஞாயிற்றுக்கிழமையும் இந்திய விமானப்படையின் எம்ஐ -17 ஹெலிகாப்டர்கள் கொத்மலை பகுதிக்கு அருகில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகள், படுகாயமடைந்த நபர்கள் மற்றும் பல நாடுகளின் குடிமக்களையும் இநதிய ஹெலிகொப்டர்கள் காப்பாற்றியுள்ளன. அத்துடன் ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடும் இலங்கை இராணுவத்தினரை மண்சரிவுகள் ஏற்பட்ட பிரதேசங்களுக்கும் கொண்டு சென்றது.
இந்தியாவின் சிறப்புப் அனர்த்த மீட்பு நிறுவனமான தேசிய அனர்த்த மீட்புப் படையினர் (National Disaster Response Force – NDRF) நேற்று கொழும்பு கொச்சிக்கடையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
அவர்கள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் மற்றும் பதுளை பிரதேசங்களில் பணிபுரிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதுடன் அவர்களின் உடனடி பாதுகாப்பை உறுதிசெய்து வருவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

