Wednesday, November 26, 2025 4:34 pm
சிவனொளிபாத தளத்தின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் ‘Clean Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நேற்று செவ்வாய்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
2025ம் ஆண்டு சிவனொளிபாத யாத்திரை காலம் தொடங்குவதற்கு முன்பு, சிவனொளிபாத மலையின் புனிதப்பிரதேசம் உட்பட செல்வதற்கு கடினமான பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றி குறித்த சூழல் கட்டமைப்பை பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் மூலம் மீண்டும் மாசடைவதைத் தடுக்கவும் கூட்டு வேலைத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை இராணுவம் மற்றும் விஷேட அதிரடிப்படையின் தலைமையிலான இந்த “சிறப்பு நடவடிக்கை” நவம்பர் 29 வரை நடைபெறும். இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கடைசி நாளான நவம்பர் 29 ஆம் திகதி நல்லதன்னி மற்றும் பலாபத்தல நுழைவாயில்களில் “Clean Sri Lanka ஒரு நாள் சிரமதான வேலைத்திட்டம்” சுமார் 3000 பேர் பங்கேற்புடன் நடைபெற உள்ளது.
சிவனொளிபாத தளத்தை பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் அற்ற பிரதேசமாக மாற்றும் நோக்கத்துடன் இந்த யாத்திரை காலத்தில் ஒரு லிட்டருக்கும் குறைவான போத்தல்கள், ஒற்றைப் பயன்பாட்டு பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொலிதீன் உறைகள் கொண்ட பொருட்கள் விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீண்டகால நடவடிக்கைகளாக, சிவனொளிபாத தளத்தில் நீர் வசதிகள் மற்றும் மலசலகூடக் கட்டமைப்பை முறைமைப்படுத்துதல், வீதியின் இருபுறமும் தரமான விற்பனை நிலையங்கள், நல்லதன்னி அருகே வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை ஒன்றை நிறுவுதல் மற்றும் பாதுகாப்பான வாகன நிறுத்துமிடத்தை நிறுவவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த செயற்திட்டத்திற்கு பொது நிர்வாக அமைச்சு, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலகங்கள், முப்படைகள், இரத்தினபுரி மற்றும் ஹட்டன் டிக்கோயா, அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச சபைகள், இலங்கை பொலிஸார், தொண்டர் அமைப்புகள், சுற்றாடல் அமைப்புகள் உட்பட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றன.


