Sunday, November 23, 2025 10:51 am
தந்தை சிறையில் அரசியல் கைதியாக இருக்க, தாயையும் இழந்த ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு இந்த அரசின் 2026இன் வரவு செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒரு ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்குவதற்கு தனிமனிதனாக, குடும்பமாக, சமூகமாக நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும். தனிமனித ஆரோக்கியம் என்பதும் தனித்தே உடல் சார்ந்தது மட்டுமன்று உளம் மற்றும் சமூகத்தின் கூட்டு விளைவுகளால் தனிமனித ஆரோக்கிய நிலை தீர்மானிக்கப்படுகிறது.
பிள்ளைகளின் நினைவு தெரிந்த நாள் முதல் தந்தை சிறையிலே இருக்க தாயையும் இழந்து பின்னர் வளர்த்த பாட்டியையும் இழந்து தனித்திருக்கும் 17 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைக்குள் வாடும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு, இந்த அரசின் 2026இன் வரவு செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறது.
அந்தப்பிள்ளைகள் இந்த இனவாத மண்ணில் பிறந்ததை விட வேறென்ன தவறு செய்தன. ஆரோக்கியமான சமூகமொன்றை நோக்கிய ஆரோக்கிய வாழ்வை உங்கள் அரசு இந்தத் தீவிலே வாழும் அந்தப்பிள்ளைக்கு வழங்காதா?
2009 உடன் ஆயுதமும் மௌனிக்கப்பட்டது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே மாறிவரும் அரசுகள் முயல்வதாக அறிக்கைகள் காட்டுகின்றன. செய்திகளில் அரசுகளின் சார்பாளர்களாக நீங்கள் மாறி மாறி எங்களை ஏமாற்றுகிறீர்கள்.
எங்கள் அயல்வீட்டுப்பிள்ளை – ஆனந்தசுதாகரின் மகன் மற்றும் மகளைப் போல பிறந்தது முதல் இறக்கும் வரை பிள்ளைகளும், சகோதரர்களும், மனைவிகளும், கணவர்மாரும், தந்தையரும் தாய்மாரும், பாட்டன், பாட்டிமாருமாக ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் இன்னமும் வடுக்களோடு தான் நகர்கிறோம். எங்களுக்கு ஆரோக்கியமான சமூக வாழ்வுக்கான கதவை உங்கள் அரசு எப்போது திறக்கப்போகிறது.
இந்தத்தீவின் நல்லிணக்கத்துக்கான முதற்படியே – எங்களுக்காக குரல்கொடுத்து இப்போதும் சிறையில் வாடும் எங்களின் உறவுகளின் விடுதலைதான். தயவுசெய்து எங்கள் உறவுகளை விடுவித்து நல்லிணக்கச் சைகையை காட்டுங்கள்.
உங்கள் வரவு – செலவுத்திட்டம் முன்மொழியும் ஆரோக்கிய வாழ்வுக்கான வழியை ஈழத்தமிழர்களுக்கும் திறந்துவிடுங்கள் – என சபையில் தெரிவித்துள்ளார்.
ஆனந்த சுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நோயுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனந்த சுதாகரின் விடுதலையை உயிர்பிரியும் வரை குறித்த பேத்தியார் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கதொன்றாகும். பேத்தியாரின் உயிரிழப்பை தொடர்ந்து பிள்ளைகளுக்காக என்றாலும் ஆனந்த சுதாகர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பலரும் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்கள்.

