Sunday, November 23, 2025 11:22 am
உலகளாவிய சீனாவின் அபிவிருத்தி மற்றும் சில சர்வதேச நாடுகளை இணைக்கும் பட்டுப்பாதை (Belt and Road Initiative) திட்ட முன் முயற்சிகளில் இலங்கை ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று கொழும்பில் உள்ள சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் வலுவான ஒத்துழைப்பு உட்பட உலகளாவிய பங்காளித்துவத்திற்கான புதிய வழிகளை சீனா திறக்கும் எனவும், புதிய அபிவிருத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.
கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் தூதுவர், இலங்கைக்கு வழங்கிய பொருளாதார உதவிகள் பற்றி நீண்ட விளக்கமளித்தார். அத்துடன் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 15 ஆவது, ஐந்தாண்டு திட்டத்திற்கான பரிந்துரைகள் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு வழிகாட்டும். இந்தத் திட்டம் உயர்தர வளர்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, பசுமை மாற்றம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
அதேவேளை, 14 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றத்தை எடுத்துரைத்த சீன தூதுவர், சீனாவின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் சுமார் 5.5 சதவீதமாக உள்ளது என்றும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025ல் 19 ரில்லியன் டொலர்களை தாண்டும் என்றும் கூறினார்.
அத்துடன் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பங்களிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல், புதுமை மற்றும் வறுமைக் குறைப்பு ஆகியவற்றில் முன்னேற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன, சீனாவில் இப்போது 500,000 உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

15 ஆவது ஐந்தாண்டுத் திட்டமானது சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு வலுவான வலியுறுத்தல்களை வழங்குவதாகவும், வர்த்தகம், உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகியவற்றில் சீன இலங்கை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சி, முதலீட்டுத் தேவைகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு ஆதரவளிக்க சீனா உறுதிபூண்டுள்ளது என்றும் சீன தூதுவர் விளக்கினார்.


