Friday, November 21, 2025 8:22 pm
மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர். ஆனால், மகிந்த ராஜபக்சவின் மகன், நாமல் ராஜபக்ச உரையாற்றியவேளை, கூட்டத்தில் இருந்த மக்கள் பலர் எழுந்து சென்றதை காணக் கூடியதாக இருந்தது என்று செய்தியாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
ஜேவிபியை மையப்படுத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தேர்தல் பிரச்சாரங்களில் மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சுமத்தியே இந்தப் பேரணி கொழும்பு நுகேகொட பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
பேரணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமை தாங்கினார். பேரணியில் கலந்துகொண்ட மக்கள் பலர், தமது கட்சி ஆதாரவை தெரிவித்தபோதும், ராஜபக்ச குடும்பத்தின் மீதான வெறுப்பை வெளிக்காட்டியிருந்தாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக நாமல் ராஜபக்ச உரையாற்ற எழுந்தபோது, மக்கள் அங்கிருந்து வெளியேறியதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர். ஏனைய உறுப்பினர்கள் அதாவது முன்னாள் அமைச்சர்கள் சிலர் உரையாற்றியபோது மக்கள் அமைதியாக இருந்து செவிமடுத்தனர்.
இதேவேளை, பேரணியில் பெருமளவு மக்கள் பங்குபற்றியிருந்தனர். ஆனால் அவர்கள் பேருந்துகளில் ஏற்றி இறக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரின் ஆதரவாளர்கள் ஒப்பாசாரத்துக்காக இப் பேரணியில் பங்குபற்றியது போன்று இருந்தாகவும் அங்குள்ள செய்தியாளர்கள் பலரும் சுட்டிக்காட்டினர்.
76 வருடங்கள் இலங்கைத்தீவை ஆட்சி செய்த தற்போதைய எதிர்க்கட்சிகள், குறிப்பாக மகிந்த, ரணில் ஆகியோரின் கட்சிகள், புதிய அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பத் தகுதியற்றவை என்ற விமர்சனங்கள், கொழும்பில் இருந்து வெளியாகும் சில பிரதான சிங்கள நாளேடுகளினால் முன்வைக்கப்பட்டன.
சிங்கள ஆங்கில நாளேடுகள், இணைய ஊகங்கள் இப் பேரணி தொடர்பான செய்திகள், வீடியோ காட்சிகளை வெளியிடுதல் போன்றவற்குக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.

