Friday, November 21, 2025 10:01 am
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (Colombo Security Conclave – CSC) பின்னர், இந்திய – இலங்கை பிரதநிதிகள் கலந்துரையாடியுள்ளனர். நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் இடம்பெற்ற இப் பாதுகாப்பு மாநாடு 7 ஆவது மாநாடு என டிக்கான் ஷறோனிகல் (deccanchronicle) என்ற இந்திய ஆங்கில செய்தித் தளம் இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய – இலங்கை பிராந்திய பாதுகாப்பின் அவசியமும், அதற்கான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் செய்தியில் விபரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தூதுக்குழுவிற்கு ஓய்வு பெற்ற பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா தலைமை தாங்கினார், இந்திய தூதுக்குழுவிற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்கினார்.
இந்த சந்திப்பின் போது, இரு தரப்பும் பரஸ்பர நலன் சார்ந்த பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக உரையாடியுள்ளன. குறிப்பாக கொழும்பு பாதுகாப்புக்கான பிரதானமான ஐந்து தூண்கள் உள்ளிட்ட பல விடயங்கள் மாநாட்டில், விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், தீவிரவாதத்தை எதிர்த்தல், கடத்தல், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், சைபர் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம் ஆகிய முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டன.
இப் பிரதான விடயங்களில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பான உத்திகள் பற்றிய திட்டங்கள் மாநாட்டில் வகுக்கப்பட்டன.
இதேவேளை இந்த மாநாடு தொடர்பாக கொழும்பில் உள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சும் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

