Thursday, November 20, 2025 12:24 pm
“ஆசிய வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் ” T20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் ‘A’ அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை ‘A’ அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை ‘A’ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய பங்களாதேஷ் ‘A’ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.
இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு சகலதுறை ஆட்டக்காரரான அணித் தலைவர் துனித் வெல்லாலகே சிறப்பான பங்களிப்பை வழங்கினார். துடுப்பாட்டத்தில் 14 பந்துகளில் 23 ஓட்டங்களை விளாசியதுடன், பந்துவீச்சில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் நாயகனாக துனித் வெல்லாலகே தெரிவு செய்யப்பட்டார்.
ஆசிய கிரிக்கெட் சபையின் மேற்பார்வையில் கட்டாரின் தோஹாவில் நடைபெறும் இத்தொடரில் இந்த வெற்றியின் மூலம் இலங்கை ‘A’ அணி ‘A’ பிரிவின் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
எதிர்வரும் 21ஆம் திகதி அரையிறுதிப் போட்டியில் இலங்கை ‘A’ அணி பாகிஸ்தானுடன் மோதவுள்ளது.

